ஒரு பெரிய பன்னாட்டு நிறுவனத்தில் வேலை பார்க்கும் பெண் ஆனந்தி. திங்கள் முதல் வெள்ளி வரை அலுவலக வேலை. மற்ற இரு நாட்கள் விடுமுறை. அலுவலகத்தில் வேலைக்கு சேர்ந்த புதிதில் தன் நண்பர்களுடன் சேர்ந்து விடுமுறையில் அனாதை ஆசிரமம் செல்வது சிறு சிறு உதவிகள் செய்வது போன்றவற்றில் தனது நேரத்தை செலவழித்தாள். அவ்வாறு செய்யும் போது தனக்கு கிடைத்த ஒரு மன நிம்மதியை அவளால் வார்த்தைகளால் விவரிக்க முடியாது.
வேலைக்கு சேர்ந்து மூன்று ஆண்டுகள் ஆகின்றன. தனது பெற்றோர்கள் பார்த்த மணமகனுக்கு கழுத்தை நீட்ட இன்னும் 2 மாதங்களே இருந்தது. தனது வருங்கால கணவனிடம் கைபேசியில் பேசுவது அவளுக்கு வழக்கமாகி விட்டது.
ஒரு மாலை வெள்ளிக்கிழமை. ஆனந்தி தனது வருங்கால கணவருடன் பேசிக் கொண்டு இருந்தாள். அப்போது அவளுடைய தோழி அங்கே வந்து, ஆனந்தி நாளைக்கு நாங்க எல்லோரும் சேர்ந்து அருகில் உள்ள முதியோர் இல்லம் செல்கின்றோம். நீயும் வருகிறாயா??? என்றாள். ஆனந்தி வருகிறேன் என்று தலையை ஆட்டி விட்டு பேச ஆரம்பித்தாள்.
மறுநாள் முதியோர் இல்லம். நண்பர்கள் இல்லத்தில் இருந்த பெரியவர்களுடன் விளையாடிக் கொண்டு இருந்தனர். ஆனந்தி தனது வருங்கால கணவர் கைபேசியில் அழைத்தார். ஆனந்தி வெளியே வந்து பேசத் தொடங்கினாள். இரண்டு நிமிடத்தில் ஆனந்தி பக்கத்தில் ஒரு பாட்டி வந்து உட்கார்த்தார். அவர்களைப் பார்த்ததும் ஆனந்தி நான் கொஞ்ச நேரம் கழித்து பேசுகிறேன் என்று சொல்லி கைபேசி இணைப்பை துண்டித்தாள்.
அந்த பாட்டி யாரும்மா உன் புருஷனா? என்று கேட்டார். ஆனந்தி வெட்கத்துடன் சிரித்து கொண்டே ஆமா அம்மா, வருங்கால கணவர் என்றாள். உடனே அந்த பாட்டி ரொம்ப சந்தோஷமா இருக்கு ம்மா. நீ நல்லா இருக்கணும் என்று வாழ்த்தினார். Thanks பாட்டி என்ற ஆனந்தி சிறிது நேரம் அமைதியாக இருந்தாள்.
அந்த பாட்டி கொஞ்ச நேரம் கழித்து தனது கைப்பையை எடுத்து அதில் ஒரு போட்டோவை எடுத்து ஆனந்தியிடம் கொடுத்தார். அதில் இளம் வயது ஜோடியின் போட்டோ இருந்தது. யார் பாட்டி இது என்றாள் ஆனந்தி. அதற்கு அந்த பாட்டி சிரித்துக்கொண்டே, இது என்னோட மகன். அது என்னோட மருமகள். என்னோட மகன் ரொம்ப நல்லவன். சின்ன பையன். அவனை என்னை மாதிரி யாராலும் பார்த்துக்க முடியாது. சின்ன வயசுல அவனோட அப்பா கடவுள் கிட்ட போனதுக்கு அப்புறம் நான்தான் அவனை பாத்துகிட்டேன். அவன் பெரியவன் ஆனதும் என்ன மாதிரியே அவனை நல்லா பாத்துக்குற பொண்ணா பாத்து கல்யாணம் பண்ணி வச்சேன். என்னோட மருமகளும் ரொம்ப ரொம்ப நல்லவள். பாவம் அவளால் என்னையும் என் புள்ளையையும் ஒரே நேரத்துல பாத்துக்க முடியல. அத்தையை நல்ல பாதுக்கணும்னு என்னை இங்கே அனுப்பி வச்சுட்டா. உன்னை பார்க்கும் போது என்னோட மருமகளை விட ரொம்ப நல்ல பொண்ணு மாதிரி தெரியுது. நீ கல்யாணத்துக்கு அப்புறம் உன் புருசனையும் பாதுக்குவ அப்புறம் உன்னோட மாமனாரையும் மாமியாரையும் பாதுப்பனு தெரியும். என்ன நா சொல்றது சரிதானே என்று அதே மாறாத சிரிப்புடன் ஆனந்தியிடம் கேட்டார். ஆனால் ஆனந்தியின் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது......