திருநெல்வேலியில் இருந்து சென்னைக்கு கிளம்பிய பேருந்தில் ஏறி தன்னுடைய ஜன்னலோர இருக்கையில் உட்கார்ந்தான் வெற்றி. மாலை 6 மணிக்கு கிளம்பிய பேருந்து மறுநாள் காலை 6 மணிக்கு மேல்தான் சென்னை வந்தடையும். சென்னையில் BPO கம்பெனியில் வேலைப்பார்க்கும் வெற்றி 2 மாதத்திற்கு ஒரு முறை தனது சொந்த ஊருக்கு வந்து செல்வது வழக்கம். அன்றும் அதுபோலத்தான் சென்னைக்கு திரும்பி செல்ல பேருந்தில் ஏறினான்.
தனது கைபேசியில் தனக்கு பிடித்த படம் ஒன்றைப் பார்த்துக்கொண்டு வந்ததில் விருதுநகர் தாண்டி விட்டதை உணரவில்லை. படம் முடிவதற்கும் பேருந்து விருதுநகரில் இருந்து கிளம்பவும் சரியாக இருந்தது. தனது கைபேசியில் பாடலை ஒலிக்க விட்டு விட்டு தனது வருங்கால வாழ்க்கையை பற்றி சிந்திக்க ஆரம்பித்தான் வெற்றி.
BPO ல் வேலை செய்தாலும் தனக்கு வரும் சம்பளம் மாத செலவுக்கு சரியாக இருக்கும். எனவே வருங்காலத்திருக்கு எதுவும் சேர்த்து வைக்க முடியவில்லை. வருங்காலத்தில் எப்படி தனது குடும்பத்தை நடத்துவது? இந்த உலகத்தில் ஏன் பிறந்தேன், எதற்காக சொந்த ஊரை விட்டு வேறொரு ஊரில் வேலை செய்து கொண்டு இருக்கிறேன்? இந்த உலகில் பிறக்கின்ற ஒவ்வொரு உயிருக்கும் ஏதோ ஒரு கடமை இருக்கும்.என்னுடைய கடமை என்ன? என்னுடைய வாழ்க்கை கடைசி வரை இப்படித்தான் இருக்குமோ? நாம் இதுவரை விமானத்தில் பயணம் செய்தது இல்லை. நமது வாழ்க்கையில் நாம் ஆசை படும் அனைத்தும் கிடைக்குமா? இதெல்லாம் பேருந்து பயணத்தின் போது வெற்றி மனதில் எழுந்த கேள்விகள். இப்படி அர்த்தமில்லாமல் யோசித்துக்கொண்டு இருப்பது வெற்றியின் வழக்கம்.
வெற்றி அவ்வாறு யோசித்து கொண்டு பயணம் செய்ததில் மதுரையை தாண்டி விட்டான். பேருந்தில் அனைவரும் தூங்கிக் கொண்டு இருந்தனர். ஆனால் வெற்றிக்கு தூக்கம் வரவில்லை. ஏனென்றால் அவனது மனதில் அதே கேள்விகள் மீண்டும் மீண்டும் வந்து சென்றது. மதுரையை தாண்டி ஒரு சுங்க சாவடியில் பேருந்து நின்றது. வெற்றி சுயநினைவுக்கு வந்தான். ஜன்னலோர இருக்கையில் உட்கார்ந்திருந்த வெற்றி பேருந்துக்கு வெளியே பார்த்துக் கொண்டு வந்தான். சுங்க சாவடியில் இருந்து வெளியே வந்த சிறிது நேரத்தில் பேருந்து ஒரு கிராமத்தின் பேருந்து நிறுத்தத்தில் நின்றது.
பேருந்து நடத்துனர் தனது கைப்பையை எடுத்து ஒரு சட்டை, கால் சட்டை மற்றும் ஒரு சாப்பாடு பையை எடுத்துக் கொண்டு கீழே இறங்கினார். ஒன்றும் புரியாத வெற்றி ஜன்னலின் வழியே எட்டி பார்த்தான். ஆனால் அவனால் எதையும் பார்க்க முடியவில்லை. சில நொடிகளில் பேருந்து புறப்பட்டது. வெற்றி மிகவும் ஆர்வத்துடன் அந்த பேருந்து நிறுத்தத்தில் யார் இருக்கிறார்கள் என்று பார்த்தான். ஒரே ஒரு நிமிடம் மட்டுமே பார்த்து இருப்பான். ஆனால் அந்த காட்சி அவன் மனதில் ஆழமாக பதிந்தது.
அந்த ஒரு நிமிட காட்சி என்னவென்றால், ஒரு வயதான மனிதர் கடும் குளிரினுள் தனது உடலை மறைக்க கூட துணி இல்லாமல் படுத்திருந்தார். அவரது உடலில் உள்ள எலும்புகளை எண்ணுமளவு இளைத்து போய் இருந்தார். அவரைப் பார்க்கும் போது சூடானில் பிணம் தின்னி கழுகின் அருகில் பசியால் செத்துக் கொண்டு இருக்கும் குழந்தையின் புகைப்படம் வெற்றிக்கு நியாபகம் வந்தது. இந்த காட்சியை பார்த்த அடுத்த நொடி நடத்துனர் முடிவு செய்து பேருந்தை நிறுத்த சொல்லி விட்டு தனது மாற்று துணியும், வைத்திருந்த சாப்பாட்டு பையையும் அந்த முதியவர்க்கு கொடுத்திருக்கிறார். அந்த முதியவர் யாரென்று கூட தெரியாமல் நடுங்கும் கைகளை கூப்பி வணங்குவதற்க்கும் வெற்றி அவரை பார்ப்பதற்கும் சரியாக இருந்தது.
அடுத்த சில நொடிகளுக்கு வெற்றி மனதில் அதே காட்சி வந்து சென்றது. தன்னுடைய நிலையை நினைத்து வருத்தப்பட்டுக் கொண்டு இருந்த வெற்றி இப்பொழுது தெளிவானாய் ஒரு முடிவு எடுத்தவனாய் தூங்க ஆரம்பித்தான். மறுநாள் சென்னையில் அவனது வீட்டுக்கு சென்று தனது துணிகளை எடுத்து அதில் தனக்கு வேண்டிய சில துணிகளை மட்டும் வைத்துக் கொண்டு, மீதமுள்ள துணிகளை தனது வேலை நேரம் போக மீதமிருந்த நேரத்தில் சென்னையில் தெருவோரத்தில் மற்றும் ரயில் நிலையத்தில் இருக்கும் கஷ்ட படுகிறவர்களுக்கு கொடுக்க ஆரம்பித்தான். மேலும் தன்னுடன் வேலை பார்க்கும் நண்பர்களிடம் பேசி அவர்களிடம் இருக்கும் பயன்படுத்தாத துணிகளை வாங்கி இல்லாதவர்களுக்கு கொடுக்க ஆரம்பித்தான். வெற்றி அன்று கண்ட காட்சிக்குப் பிறகு அவனது மனதில் எந்த குழப்பமும் எழவில்லை.
நல்ல விஷயங்களை எங்கு வேண்டுமானாலும் யாரிடம் வேண்டுமானாலும் கற்றுக் கொள்ளலாம்.
No comments:
Post a Comment